தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையம் 1996 இல் சமூக சேவைகள் மற்றும் சமூக நலன்புரி அமைச்சின் கீழ் தாபிக்கப்பட்டது. 2005.12.08 ஆந் தேதிய 1422/22 ஆம் இலக்கமுடைய அதிவிசேட வர்த்தமான அறிவித்தல் மூலமாக நிவாரண, புனர்வாழ்வு மற்றும் மறுசீரமைப்புப் பணிகளைத் திட்டமிட்டு அமுலாக்குவதற்காக அனர்ந்த நிவாரண சேவைகள் அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டது. இது 2007.01.09 ஆந் தேதிய 1482/9 ஆம் இலக்க வர்த்தமான அறிவித்தல் மூலமாக தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையமென மீளப் பெயரிடப்பட்டு மீள்குடியமர்தல் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சுக்கு மாற்றப்பட்டது. 1651/20 ஆம் இலக்கமுடைய வர்த்தமான அறிவித்தலின் பிரகாரம் இது 2010.04.30 ஆம் திகதியில் இருந்து அமுலுக்கு வரத்தக்கதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் கீழ் இயங்கி வருகின்றது.
இது கொழும்பு 03, ஆர். ஏ. த மெல் மாவத்த, இலக்கம் 498 இல் அமைந்துள்ளது. அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் கௌரவ அமைச்சராலும் செயலாளராலும் முன்வைக்கப்படுகின்ற கொள்கை ரீதியான வழிகாட்டலின் கீழ் இது இயங்கி வருகின்றது. அதன் கருத்திட்டங்களும் நிகழ்ச்சித்திட்டங்களும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு வழங்குகின்ற கொள்கை வழிகாட்டல்களுக்கிணங்க சம்பந்தப்பட்ட மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களால் அமுலாக்கப்பட்டு வருகின்றன. இது தவிர்ந்த அனர்த்த நிவாரண இணைப்பு உத்தியோகத்தர்கள் மாவட்ட மட்டத்தில் சம்பந்தப்பட்ட மாவட்டச் செயலாளர்களின் மேற்பார்வையின் கீழ் செயலாற்றி வருகின்றனர்.
நோக்கு
அனர்த்த நிவாரண சேவைகளினூடாக பாதுகாப்பான இலங்கையை நோக்கி.
பணி
விழிப்புணர்வு, தடுத்தல், தயார்நிலை, தணித்தல் மற்றும் இணைப்பாக்கம் மூலமாக இயற்கையானதும் மனிதனால் தோற்றுவிக்கப்படுகின்றதுமான இரு வகையைச் சேர்ந்த அனர்த்தங்களிலிருந்து மனித உயிர்கள், உடைமைகள், சுற்றாடல் மற்றும் வனசீவராசிகளைப் பாதுகாத்தல்.
குறிக்கோள்கள்
அனர்த்த நிவாரணங்களை வழங்குவதற்கு அவசியமான தேசிய சாத்திய வளங்களை மேம்படுத்திப் பலப்படுத்துவதன் மூலமாக மானிடத் துன்பங்களையும் பொருளாதார உட்கட்டமைப்புக்களுக்கு ஏற்படுகின்ற நட்டங்கள் மற்றும் சேதங்களையும் குறைத்துக்கொள்வதன் மூலமாக நிலைபேறான அபிவிருத்தியை ஏற்படுத்துவதற்கான தேசியக் குறிக்கோளுக்கு பங்களிப்புச் செய்தல்.
செயற்பாடுகள்
- பாதிக்கப்படுகின்ற மக்களுக்கு குறுங்கால மற்றும் நெடுங்கால நிவாரணங்களை வழங்குதல்.
- இயற்கையான மற்றும் மனிதனால் தோற்றுவிக்கப்படுகின்ற ஆகிய இருவகைகளையும் சேர்ந்த அனர்த்தங்களிலிருந்து மக்களைக் காப்பாற்றிக் கொள்வதற்கான நிகழ்ச்சித்திட்டங்களை வகுத்து அமுலாக்கல்.
- அனர்த்தங்களின் பாதிப்பினைக் குறைத்துக் கொள்வதற்கு ஏதுவாக அமையக்கூடிய கருத்திட்டங்களை திட்டமிட்டு அமுலாக்கல். (விவசாயக் கிணறுகளை அமைத்தல், மழைநீரை சேகரித்து வைத்தல் போன்றவை)
- மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு செயற்பாடுகள் அமுலாக்கப்படுவதை உறுதிப்படுத்தும் பொருட்டு சம்பந்தப்பட்ட தரப்பினர்களுடன் இணைப்பாக்கத்தை மேற்கொண்டு நெறிப்படுத்துதல்.
- இயற்கையான மற்றும் மனிதனால் தோற்றுவிக்கப்படுகின்ற ஆகிய இருவகைகளையும் சேர்ந்த அனர்த்தங்களினால் பாதிக்கப்படுகின்ற மக்களின் வாழ்வாதாரங்களையும் பொருளாதாரத்தையும் இயல்பு நிலைக்கு கொண்டுவரும் பொருட்டு மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு நிகழ்ச்சித்திட்டங்களை அமுலாக்கல்.
- அனர்த்த நிலைமைகள் பற்றிய தகவல்களைத் தயாரித்து விநியோகித்தல்.
- அனர்த்த நிலைமைகளுக்கும் நிவாரணம் வழங்கும் உபாய முறைகளுக்கும் முகங்கொடுக்க வேண்டிய விதம்பற்றி அரச உத்தியோகத்தர்களுக்கும் பொது மக்களுக்கும் விழிப்பூட்டுவற்கான நிகழ்ச்சித்திட்டங்களை நடாத்துதல்.
- அவசர வேளைகளில் நிவாரண தொழிற்பாடுகளை இணைப்பாக்கம் செய்தல்.