- நிதியை ஒதுக்கிக்கொடுத்தல்.
- வீடமைப்பு நிவாரணங்கள்
- பயிர்ச் சேதங்களுக்கான நிவாரணங்கள்
- குடிநீர்
- சிறிய அளவில் துன்பங்களைத் தணிக்கும் நிகழ்ச்சித்திட்டங்கள்
- இறப்புக்களுக்கான இழப்பீடுகள்
- காயங்களுக்கான இழப்பீடுகள்
- சுயதொழில் வசதிகள்
- நிர்வாகம்
- பிற
நிதியை ஒதுக்கிக்கொடுத்தல் (சமைத்த உணவுகள் மற்றும் உலர் பங்கீடுகளுக்கான பணத்தை ஒதுக்கிக்கொள்ளல்)
ஒரு பரவலான அனர்த்தத்தின் போது பிரதேச செயலாளர் தனது தற்றுணிபின்படி உச்சமட்டமாக மூன்று (03) நாட்களுக்கான சமைத்த உணவினை வழங்க முடியும். இக்காலப்பகுதியை மேலும் நீடிப்பதாயின் பணிப்பாளரது அனுமதி பெறப்படல் வேண்டும். (இப்பணிக்காக 12 வயதுக்கு மேற்பட்ட பராயமடைந்த ஒருவருக்கு நாளொன்றுக்கு ரூ. 70/- வீதமும் 12 வயதுக்குக் குறைந்த சிறுவர்களுக்காக ஒருவருக்கு ரூ. 50/- வீதமும் செலவிடலாம்.)
இடம்பெயர்ந்துள்ள ஆட்களுக்கு தமது உணவினை சமைத்துக்கொள்ளக்கூடிய சந்தர்ப்பங்களிலேயே உலர் பங்கீட்டுப் பொருட்கள் வழங்கப்படும். உலர் பங்கீட்டுப் பொருட்களை வழங்கும் போது குடும்ப மாதாந்த வருமானம் ரூ. 3,000/- ஐ விடக் குறைவாகக் கிடைக்கின்ற, பாதிக்கப்பட்டுள்ள மெய்யான ஆட்களை மாத்திரம் இனங்காண்பதற்கான சரியான நடவடிக்கைகளை பிரதேச செயலாளர் மேற்கொள்ள வேண்டும்.
ஒரு வார காலத்திற்காக உலர் பங்கீட்டுப் பொருட்களை பிரதேச செயலாளர் விநியோகிக்கலாம். அக்காலப் பகுதியை நீடிக்க வேண்டுமாயின் பணிப்பாளரின் அனுமதி பெறப்படல் வேண்டும். உலர் பங்கீட்டுப் பொருட்களின் பணப் பெறுமதி கணிப்பிடப்படல் வேண்டுமென்பதோடு, சம்பந்தப்பட்ட பெறுமதிக்கு ஏற்றவாறு உணவுப் பொருட்கள் கூட்டுறவு வர்த்தக நிலையங்களிலிருந்து பெறப்படல் வேண்டும்.
ஒரு வாரத்திற்கான உலர் உணவுப் பொருட்கள்:
- தனியாளுக்கான உச்ச அளவு - ரூ. 245/- ஆகும்
- இரண்டு அங்கத்தவர்களைக் கொண்ட குடும்பமொன்றுக்காக உச்ச அளவு - ரூ. 315/-
- மூன்று அங்கத்தவர்களைக் கொண்ட குடும்பமொன்றுக்காக உச்ச அளவு - ரூ. 385/-
- நான்கு அங்கத்தவர்களைக் கொண்ட குடும்பமொன்றுக்காக உச்ச அளவு - ரூ. 455/-
- ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட எண்ணிக்கை கொண்ட குடும்பமொன்றுக்காக உச்ச அளவு - ரூ. 525/-
முழு வாரத்திற்குமான உலர் பங்கீட்டுப் பொருட்கள் ஒரே நாளில் பெற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் கிடையாது. அனர்த்தத்தின் தன்மையைக் கருத்திற் கொண்டு 02, 03, 04 அல்லது 05 நாட்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களை வழங்க முடியும்.
வீடமைப்பு நிவாரணங்கள்
விண்ணப்பதாரிக்கு வசிக்க ஒரேயொரு வீடு மாத்திரம் இருந்து அந்த வீடு அனர்த்தம் காரணமாக சேதமடைந்துள்ள வேளையில் அதன் திருத்த வேலைகளுக்காக இன்றேல் மீளக் கட்டியெழுப்புவதற்காக நிவாரணத் தொகை செலுத்தப்படும். விண்ணப்பதாரிக்கு வசிக்க வேறொரு வீடு இருப்பதாக புலப்படுகின்ற சந்தர்ப்பங்களில் அல்லது அது வர்த்தகம் நடைபெறும் இடமாகவோ அல்லது பொதுக் கட்டடமாகவோ அமையும் சந்தர்ப்பங்களில் இதன் கீழ் நிவாரணத் தொகை செலுத்தப்படமாட்டாது. விண்ணப்பதாரியின் குடும்ப மாதாந்த வருமானம் ரூ. 3,000/- அல்லது அதற்கு குறைந்ததாக அமைதல் வேண்டும்.
அனர்த்தம் காரணமாக வீடொன்று முற்றாகவே சேதமடைந்திருப்பின் செலுத்தக்கூடிய உச்சமட்ட நிவாரணத் தொகை ரூ.50,000/- ஆகும். இருப்பினும் அனர்த்தம் காரணமாக ஒரு பகுதி மாத்திரம் சேதமடைந்த வீடொன்றுக்காக செலுத்தக்கூடிய உச்சத் தொகை ரூ.25,000/- ற்கு மட்டுப்படுத்தப்படல் வேண்டும்.
பயிர்ச் சேதங்களுக்கான நிவாரணங்கள்
எவ்விதமான காப்புறுதித் திட்டத்தினாலும் உள்ளடக்கப்பட்டிராத உணவுப் பயிர்களுக்கு பரவலான அனர்த்தத்தின் போது நேரிடுகின்ற சேதங்கள் தொடர்பில் நிவாரணம் வழங்கும் பொருட்டு கவனத்திற்கொள்ளப்படலாம். எனினும் வீடமைப்புப் பணிகள் மற்றும் உணவுப் பயிர்கள் ஆகிய இரண்டுக்காகவும் செலுத்தக்கூடிய உச்சமட்டப் பணத்தொகை ரூ. 50,000/- மாத்திரமே. அனர்த்தத்தின் காரணமாக பயிர்களுக்கு மாத்திரம் சேதமேற்பட்டுள்ள வேளையில் ஒருவருக்குச் செலுத்தக்கூடிய உச்சத் தொகை ரூ. 20,000/- ஆகும். பயிர் முற்றாகவே அழிவடைந்து அதன் மொத்த நட்டம் ரூ. 60,000/- ஐ விட அதிகமானதாக அமைகின்ற வேளைகளில் மாத்திரமே இந்த நிவாரணம் வழங்கப்பட முடியும்.
குடிநீர்
குடிநீர் கிடைக்காத அத்துடன் வேறு நீர் மூலத்தில் இருந்து நீரைப் பெற்றுக்கொள்ள இயலாத பிரதேசங்களுக்காக மாத்திரமே குடிநீரை விநியோகிக்க ஆரம்பிக்க வேண்டும். அத்தகைய பிரதேசங்களிலும் திட்டவட்டமான கால அட்டவணைக்கிணங்கவே நீரை விநியோகிக்க வேண்டும்.
சிறிய அளவில் துன்பங்களைத் தணிக்கும் நிகழ்ச்சித்திட்டங்கள் - வரட்சித் தணிப்பு நிகழ்ச்சித்திட்டங்களை அமுலாக்கல்
மொனறாகல மாவட்டத்தின் தெரிவு செய்யப்பட்ட மூன்று பிரதேச செயலகங்களுக்கு ஏற்படுகின்ற வரட்சியின் தாக்கத்தை தணிக்கும் பொருட்டு மழை நீரைச் சேகரிக்கும் நிகழ்ச்சித்திட்டங்களை தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையம் அமுலாக்கியுள்ளது. இதன் பொருட்டு 4 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதோடு, இதன் மூலமாக 100 குடும்பங்களுக்கு நன்மை கிடைக்கின்றது. இது 2011 தெயட்ட கிருள நிகழ்ச்சித்திட்டத்துடன் நிறைவு செய்யப்பட்டு அமுலாக்கப்பட்டுள்ளது.
மொனறாகல மாவட்டத்தில் வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ள கமக்காரர்களின் நலன்கருதி சீன அரசாங்கம் கொடையாக வழங்கிய 1.2 மில்லியன் ரூபா பெறுமதியான நீர் தெளிக்கும் தொகுதியினை தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையம் ஒப்படைத்துள்ளது. இதன் மூலமாக 20 விவசாய அமைப்புக்களுக்கு நன்மை கிட்டியுள்ளது.
இதற்கு மேலதிகமாக அம்பாறை, இரத்தினபுரி, அம்பாந்தோட்டை, புத்தளம், அனுராதபுரம், பதுளை மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களின் விவசாய அமைப்புக்களுக்கும் நீர் தெளிக்கும் தொகுதிகள் வழங்கப்படும்.
இறப்புக்களுக்கான இழப்பீடுகள்
ஏதேனும் அனர்த்தத்தின் விளைவாக ஆளொருவர் இறப்பின் சம்பந்தப்பட்ட மரணச்சடங்கு செலவினை தாங்கிக்கொள்ள இயலாதவிடத்து இறந்தவரின் நெருங்கிய உறவினருக்கு ரூ. 15,000/- நிவாரணத் தொகையை வழங்கலாம்.
காயங்களுக்கான இழப்பீடுகள்
அனர்த்தத்தின் போது ஏற்படுகின்ற காயங்களுக்காக மருத்துவ சிகிச்சைகளை பெற்றுக்கொள்வதை இயலச் செய்வதற்காக ரூ.10,000/- ஐ உச்சத் தொகையாகச் செலுத்தலாம். சம்பந்தப்பட்ட மருத்துவச் சிகிச்சையை அரசாங்க வைத்தியசாலையிலிருந்து பெற்றுக்கொள்ளுமிடத்து இக்கொடுப்பனவு செலுத்தப்படலாகாது. கடுங்காயங்களுக்கான மருத்துவ சிகிச்சை பெற்றுக்கொள்ள நேரிடுகின்ற வேளையில் மாத்திரம் இத்தொகையைச் செலுத்துவது உசிதமானது. அதற்குப் புறம்பான காயங்களுக்காக ரூ. 5,000/- வரை எல்லை விதித்து இந்த உதவித் தொகையைச் செலுத்துவது பொருத்தமானது. மருத்துவ அறிக்கையையும் மருந்துப் பட்டோலையையும் அடிப்படையாகக் கொண்டே செலுத்த வேண்டிய தொகை தீர்மானிக்கப்படல் வேண்டும்.
சுயதொழில் வசதிகள்
சுயதொழிலில் ஈடுபட்டுள்ள ஆளொருவரின் சுயதொழில் அனர்த்தத்தின் விளைவாக முழுமையாகவே சேதமுற்ற வேளையில் வேறு வருமான வழிவகையேதும் இல்லாவிடின் அவரது ஒரே வருமான வழிவகை முற்றாக இல்லாமல் போனமைக்காக ரூ. 20,000/- ஐ உச்ச எல்லைக்குக் கட்டுப்பட்டதாக நிவாரணத் தொகையொன்றைச் செலுத்தலாம்.
நிர்வாகம்
பரவலான அனர்த்தம் தொடர்பான பணிகளில் ஈடுபடுகின்ற உத்தியோகத்தர்களுக்காக மாத்திரம் மேலதிக நேரப்படி மற்றும் பிரயாணச் செலவுகள் போன்றவற்றைச் செலுத்தலாம்.
பிற
காட்டு யானைகளால் பயிர்கள் நாசமாக்கப்படல்
காட்டு யாளைகளால் பயிர்கள் நாசமாக்கப்படுதல் தொடர்பில் உச்ச மட்டமாக ஒரு ஏக்கருக்கான நிவாரணத் தொகை செலுத்தப்படும். நெற்கதிர்கள் உருவாக முன்னர் நெற்செய்கைக்கு சேதம் ஏற்பட்டவிடத்து ஒரு ஏக்கருக்காக செலுத்தக்கூடிய உச்ச நிவாரணத் தொகை ரூ. 3,000/- ஆகும். நெற்கதிர்கள் உருவாகிய பின்னர் நெற்செய்கைக்கு நேரிடுகின்ற சேதம் தொடர்பில் செலுத்தக்கூடிய உச்ச நிவாரணத் தொகை ஏக்கருக்கு ரூ. 6,000/- ஆகும். பல்வேறு மரக்கறிப் பயிர்களுக்கு ஏற்படுகின்ற சேதத்திற்காக செலுத்தக்கூடிய நிவாரணத் தொகை ஏக்கரொன்றுக்கு ரூ. 3,000/- ஆகும்.
காய்கள் நிறைந்த தென்னை மரமொன்று முற்றாகவே சேதமடைந்துள்ள வேளையில் மரமொன்றுக்கு ரூ. 750/- வீதம் செலுத்தப்படல் வேண்டுமென்பதோடு, செலுத்தப்படுகின்ற உச்ச நிவாரணத் தொகை ரூ. 6,000/- ஆக மட்டுப்படுத்தப்படல் வேண்டும். பிற பலவிதமான பயிர்களுக்கு ஏற்படுகின்ற சேதங்களுக்காக ஒரு ஏக்கருக்கு ரூ. 3,000/- வீதம் செலுத்தப்படல் வேண்டும். இந்த நிவாரணத் தொகையும் ரூ. 6,000/- ஆக மட்டுப்படுத்தப்படல் வேண்டும். எவ்விதத்திலும் பயிர்ச் செய்கைக்கு ஏற்பட்டுள்ள சேதம் தொடர்பாக குடும்பமொன்றுக்கு செலுத்தப்பட வேண்டிய உச்சமட்ட நிவாரணத் தொகை ரூபா 8,000/- க்கு மட்டுப்படுத்தப்படல் வேண்டும்.
காட்டு யானைகளின் தாக்குதலால் மனித உயிர்களுக்கும் உடைமைகளுக்கும் ஏற்படுகின்ற சேதங்கள்
காட்டு யாளைகளின் தாக்குதல் காரணமாக ஏற்படுகின்ற மரணத்திற்காக நிவாரணம் வழங்குதல் தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தினால் மேற்கொள்ளப்படுவதில்லை. அதற்கான கோரிக்கையினை வனசீவராசிகள் பேணல் திணைக்களத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்.
கடலில் காணாமல் போகும் மீனவர்களின் தங்கிவாழ்வோருக்கான உலர் உணவுப் பங்கீட்டுப் பொருட்கள்
அனர்த்தத்திற்கு இலக்காகிய குடும்பங்கள் பற்றிய விபரங்களை மாவட்டச் செயலாளரின் விதப்புரை சகிதம் சம்பந்தப்பட்ட பிரதேச செயலாளர் கடற்றொழில் பணிப்பாளர் நாயகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். கடற்றொழில் பணிப்பாளர் நாயகத்தின் விதப்புரையைக் கொண்ட அக்கோரிக்கைகள் கிடைத்தவிடத்து பணிப்பாளரால் மாவட்டச் செயலாளருக்கு பணம் ஒதுக்கிக் கொடுக்கப்படும். அனர்த்தத்திற்கு இலக்காகிய மீனவர் குடும்பங்களுக்கு மூன்று மாத காலத்திற்காக உலர் உணவுப் பங்கீட்டுப் பொருட்கள் வழங்கப்படும்.